Wednesday 3 July 2013

2011-01-29 நாடுகடந்த தமிழீழ அரசின் "தமிழீழ தேசிய அட்டை" அறிமுக நிகழ்வு



Wednesday, 02 February 2011 09:09
நாடுகடந்த தமிழீழ அரசின் தேசிய அட்டை அறிமுக விழாவும், முதல்கட்ட விநியோகமும் நாடுகடந்த தமிழீழ அரசினால் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தியாகப் பேரொளி முத்துக்குமாரன் நினைவு வணக்கமும் இடம்பெற்றது.
 
கடந்த சனிக்கிழ்மை 29-01-2011 அன்று மாலை 7 மணிக்கு லண்டன் பிறண்ட் ஹோலில் நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்பு நிகழ்வில் பிறண்ட் நகரசபை உறுப்பினர் உட்பட தமிழ் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
 
மங்கள விளக்கை மாவீரரான கப்டன் இளையவளின் சகோதரன் திரு. குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ மக்களுக்காக தன்னை தீக்கிரையாக்கி உலகிற்கு உரத்துக் கூறிய உயர்ந்த மனிதனாக உலகத் தமிழர்கள் நெஞ்சங்களில் குடிகொண்டுள்ள தியாகப் பேரொளி முத்துக்குமார் அவர்களுக்கான நினைவுவணக்க நிகழ்வு முதல் நிகழ்வாக இடம்பெற்றது.
 
தியாகப் பேரொளி முத்துக்குமார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசின் பெண்கள் மற்றும் முதியோர் நலன் பேணல் அமைச்சர் திருமதி. பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வை நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினரான திரு. செல்வா அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். முதலாவதாக உரையாற்றிய வடமேற்கு லண்டனை சேர்ந்த தமிழ் உணர்வாளரான திரு. முருகானந்தன் அவர்கள் தியாகப் பேரொளி முத்துக்குமார் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
 
அவர் அங்கு உரையாற்றுகையில் முத்துக்குமாரைத் தொடர்ந்து 17 தியாகிகள் தமிழின விடுதலைக்காக தம்மை தீக்கிரையாக்கியுள்ளார்கள். அவர்களின் தியாகங்களை ஈடுசெய்வதானால் அது நாம் தமிழிற்கும், தமிழர்களுக்கும், தமிழீழ விடுதலைக்கும் அர்ப்பணிப்போடு செயற்பட்டால் மட்டுமே ஈடுசெய்ய முடியும். இவர்களின் தியாகம் தான் இந்தியாவின் சதிச்செயலையும், சர்வதேசங்களின் பாரா முகத்தையும் வெளிச்சம்போட்டு காட்டியது. ஆகவே அவர்களின் உச்சக் கட்டமான தியாகத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும் என்ரதோடு நாடுகடந்த தமிழீழ அரசின் முக்கியத் துவத்தையும், அதன் அவசியத்தையும் வலியுறுத்தியதோடு தனது வாழ்த்துக்களையும் கூறினார்.

தொடர்ந்து பாவலர் திரு. வல்வைத் தேவன் அவர்களின் முத்துக்குமார் நினைவுக் கவிதை இடம்பெர்றது.
தொடர்ந்து உரையாற்றிய நாடுகடந்த தமிழீழ அரசின் உள்த்துறை அமைச்சர் திரு. பாலச்சந்திரன் அவர்கள் முத்துக்குமாரனை நினைவுகூர்ந்ததோடு நாடுகடந்த தமிழீழ அரசிற்கான இந்தியாவிற்கான பிரதிநிதி யார் என்ற விடையம் எதிர்வரும் 04-02-2011 அன்று அறிவிக்கப்படவுல்ளதாகவும், தமிழீழத்தை வென்றெடுக்க அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
அடுத்து நாடுகடந்த தமிழீழ அரசின் உதவி நிதி அமைச்சரான திரு. ராஜேந்திரா அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து தேசிய அட்டை அறிமுகமும், முதல் கட்ட விநியோகமும் இடம்பெற்றது.






 
முதலாவது தேசிய அட்டையை நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப் பிரதமர் திரு. உருத்திராபதி சேகர் அவர்கள் வழங்க திரு. ஆறுமுகம் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச தமிழ்ச் செய்தியாளர் சங்கத்தின் தலைவருமான திருமதி. ஆனந்தி அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் மகளிர் மற்றும் முதியோர் நலன்பேணல் அமைச்சர் திருமதி. பாலாம்பிகை அவர்கள் தேசிய அட்டையை வழங்கினார். தொடர்ந்து மாணவர் பேரவையின் ஆரம்பகால உறுப்பினரான திரு. சத்தியசீலன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் உதவிப்பிரதமர் திரு. சேகர் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநிதிகளான செல்வி. ஆர்த்தி, செல்வன். சந்தோஸ், திரு. கவிராஜ், ஆகியோர் உட்பட பல பொதுமக்களும் அங்கு தமது தேசிய அட்டைகளை பெற்றுக்கொண்டனர்.
 
தேசிய அட்டை வழங்கலைத் தொடர்ந்து பிரண்ட் கவுன்சிலர் திரு. ஜேம்ஸ் அலி அவர்களும், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரித்தானியாவிற்கான தேர்தல் ஆணையாளர் திரு. விஜயசிங்கம் அவர்களும் நாடுகடந்த தமிழீழ அரசை வாழ்த்தியதோடு அதன் முக்கியத்துவம் உணர்ந்து அனைவரும் நாடுகடந்த தமிழீழ அரசிற்கு பலம் சேர்த்து தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தினர்.
 
இந்த நிகழ்வில் தமது செயற்திட்டங்கள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகார அமைச்சர் திரு. தயாபரன் அவர்களும், நாடுகடந்த தமிழீழ அரசின் உதவிப்பிரதமரும், மாவீரர், போராளிகள் குடும்ப நலன்பேணல் அமைச்சர் திரு. சேகர் அவர்களும், தமிழீழ அரசின் மகளிர் மற்றும் முதியோர் நலன்பேணல் அமைச்சர் திருமதி. பாலாம்பிகை அவர்களும் மண்டபத்தில் கூடியிருந்த மக்களிற்கு விளக்கமளித்தனர்.
மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு இரவு 10 மணியுடன் இனிதே நிறைவு பெற்றது.

0 comments:

Post a Comment