Wednesday 3 July 2013

2012-05-18 லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாள் மே18



பிரித்தானியா தலைநகர் லண்டனில் ஈகைபேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற "முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாள்". 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழர் தாயகப் பகுதியில், சிங்கள அரச படைகளினால் திட்டமிட்ட வகையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களை நினைவு கூர்ந்து மே18 ஆம் திகதியை தமிழீழ தேசிய துக்க நாளாகவும், முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாளாகவும் பிரகடனம் செய்து, முன்னெடுக்கப்பட்ட நினைவு வணக்க நிகழ்வு கடந்த மே 18ஆம் திகதி ஈகைபேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த நினைவு வணக்க நிகழ்வினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. தணிகாசலம் தயாபரன் அவர்கள்  நிகழ்வினை இறுதிவரை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.
நிகழ்வில் ஈகப்பேரொளி முருகதாசனின் தாயார். திருமதி வர்ணகுலசிங்கம் அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றிவைத்து வணக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பிரித்தானியத் தேசியக் கொடியும், தமிழீழத் தேசியக் கொடியும் ஒன்றின் பின் ஒன்றாக ஏற்றிவைக்கப்பட்டது. பிரித்தானிய தேசிய கீதம் இசைக்க பிரித்தானியத் தேசியக் கொடியை அக்ட் நவ் அமைப்பின் பணிப்பாளர் Mr. Graham Wilson அவர்கள் ஏற்றி வைக்க கோடி வணக்கமும் செலுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடி வணக்கப் பாடல் ஒளிபரப்ப தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

 தமிழீழ தேசியக்கொடியை மிக நீண்டகால தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதியுமான திரு.மாறன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக் கொடி வணக்கமும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மண்மீட்புப் போரில் மரணித்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமான ஈகைச் சுடரினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப் பிரதமருமான திரு.உருத்திராபதி சேகர் அவர்கள் ஏற்றிவைத்தார்.

 ஈகைச் சுடரினை ஏற்றும் போது, நீல வானமும் கருநிரமாகி தனது கண்ணீர்த் துளிகளைத் தூவி முள்ளிவாய்க்காலில் மரணித்த எம் உறவுகளுக்கான தனது இரங்கலை தெரிவித்திருந்தது.
தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு.விஸ்வனாதன் உருத்திரகுமாரன் அவர்களின் உரை அகன்ற திரையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
தாயக விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்காகவும், உலக நாடுகளில் வேள்வித் தீயில் ஆகுதியாகிய தியாகிகளுக்கும், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காகவும், சிறீலங்கா அரச படைகளால் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவி திருமதி. இரத்தினேஸ்வரி அம்மா அவர்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிக்கு தீபம் ஏற்றி, மலர்வணக்கத்தை ஆரம்பித்து வைக்க, வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட மக்களும் வரிசையாகச் சென்று தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

வணக்க நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப் பிரதமர் திரு.உருத்திராபதி சேகர்வெளிவிவகார அமைச்சர் திரு.தணிகாசலம் தயாபரன், பெண்கள் சிறுவர் விவகார அமைச்சர், திருமதி பாலாம்பிகை முருகதாஸ் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரித்தானியா தமிழர் பேரவையின் தலைவர் உள்ளிட்ட, மூத்த பிரதி நிதிகளும், தமிழ்தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவி திருமதி, இரத்தினேஸ்வரி அம்மா, மற்றும் அதன் உறுப்பினர்களும், பிரித்தானியா தமிழர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களும், இளையோர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும், பாடசாலைகள், கோவில்களின் பிரதிநிதிகளும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களில் பிரதிநிதிகளும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திரு.தணிகாசலம் தயாபரன் அவர்கள் தலைமை உரையாற்றுகையில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் நிகழ்வுகளை மே18 இல் நடத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், அதன் ஊடாக முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க இருக்கும் முக்கிய செயற்பாடுகள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களான Mr.Virendra Sharma - MP for Ealing Southall, Ealing Councillor Mr.Julian Bell, newly elected GLA MEMBER Dr.Onkar Sohota, ACT NOW அமைப்பின் நிறுவனர் Mr.Tim Martin,
 நாடுகடந்த தமிழீழ அரசின் பெண்கள் சிறுவர் விவகார அமைச்சர், திருமதி பாலாம்பிகை முருகதாஸ், மற்றும் IBC வானொலியின் கலையக பணியாளர் ரத்னா, ஆகியோர் உரையாற்றினர். அத்தோடு பிரித்தானியப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் Mr. ED Miliband அவர்கள் இந் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாததையிட்டு வருத்தம் தெரிவித்தும், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக அஞ்சலிகளைத் தெரிவித்தும் அனுப்பியிருந்த செய்தியினை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினரும், தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் உறுப்பினருமான, திரு.ஜெயந்தன் அவர்கள் வாசித்திருந்தார்.

சிறப்புரையினை தாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான திரு.கெளதம் அவர்கள்  நிகழ்த்தினார்.

"கண்ணீருடன் உறவுகளைப் புதைத்தோம் கம்பீரத்துடன் தமிழீழத்தை அறுவடை செய்வோம்"
திரு.கெளதம் அவர்கள் உரையாற்றுகையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளை அதன் தலைவர்கள் பல வகையாக பிரித்து வைத்திருந்தாலும், தமிழீழம் என்ற இலட்ச்சியப் பயணத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதையும். புலம்பெயர் தேசத்தில் தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்கள் அணிகளாக பிரிந்து நின்று செயற்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், தவறுகளைக் களைந்து, சரியானவற்றை கைகுலுக்கி அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும், வருகின்ற மாவீரர் நாள் நிகழ்வினை அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக ஓர் அணியில் நின்று நடத்துவதற்கு முன்வரவேண்டும் என்றும் புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களிடம் தனது உருக்கமான வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

நாம் இவ்வாறு பிரிந்து நின்று செயற்பட்டால் அது சிங்களவனுக்கு வெற்றிச் செய்தியாக இருக்குமென்றும், நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுகிறோம் என்ற செய்தி அறிந்தால் சிங்களவனுக்கு அது பெரும் அடியாக அமையும் என்றும், அப்படி நாம் ஒன்றுபட்டு போராடப் புறப்பட்டால் சிங்களவனுக்கு பெரும் மரண அடியாக அமையும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாக குறிப்பிடுகையில். அவதாரங்கள் எந்த நோக்கத்திற்காக பிறப்பெடுக்கின்றனவோ, அந்த இலக்கை அடையாமல் அவதாரங்கள் எதுவும் மரணிப்பதில்லை என்றும். அதுபோல் தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழத்தை அடையாமல், தமிழ் மக்களின் மனங்களில் நிரந்தரமான மகிழ்ச்சியைக் காணாமல் இந்த உலகை விட்டுப் போகமுடியாது என்றும், சில வேளை தமிழீழ மண்ணை விட்டு வெளியேறியிருக்கலாம் அனால் இந்த உலகை விட்டு நிச்சயமாக இப்போதைக்கு போயிருக்க முடியாது. என்று பெரும் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் அண்ணன் வர்ர வரைக்கும், அண்ணனோட சொல்! அண்ணனுடைய கட்டளை! கிடைக்கும் வரை  என்று நாங்கள் காத்துக்கொண்டு இருந்தா நம்மளைப் போல ஏமாளிகள் வேற யாராகவும் இருக்கமுடியாது. "நம் தேசத்தலைவன் திரும்பிவரும் காலத்திலே" நீ இருக்கவேணும் எரிமலையின் கோலத்திலே" நமது பயணம் தடைப்படாமல் தொடரப்பட வேண்டும், எமக்கான விடுதலையை வென்றெடுக்க நாம் முன்னரை விட மிகவும் வேகமாக அண்ணன் வரும் வரை பயனிக்க வேண்டும். என்றும் முள்ளிவாய்க்காலில் "கண்ணீருடன் உறவுகளைப் புதைத்தோம் கம்பீரத்துடன் தமிழீழத்தை அறுவடை செய்வோம்" என்று தனதுரையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழீழ தேசியக் கொடிகளை தமது கைகளில் தாங்கியவாறு ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டிருந்த இந் நிகழ்வின் இறுதியில் மூள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உண்மை நிலையை எடுத்துக்காட்டும் மேடை நிகழ்வு ஒன்றும் பிரித்தானியா தமிழர் ஒன்றியத்தின் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் உணர்வு பூர்வாக சித்தரித்து வழங்கப்பட்டிருந்தது.. இறுதி நிகழ்வாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டு தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் இரவு 9:00 மணிக்கு நிறைவடைந்தது.

0 comments:

Post a Comment